உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் தடையை மீறி பாரத மாதா படத்துக்கு மாலை; விசுவ இந்து பரிசத் நிர்வாகிகள் கைது

Published On 2023-09-30 07:41 GMT   |   Update On 2023-09-30 07:41 GMT
  • கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.
  • மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்

கன்னியாகுமரி :

விசுவ இந்து பரிசத்தின் 60-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை இன்று நடத்தப்போவதாக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து தடையை மீறி பாரத மாதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பீமாராவ் தலைமையில் மாநில விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் சேதுராமன், குமரி மாவட்ட தலைவர் குமரேசதாஸ், மாநில பொருளாளர் பாலு, மாநில இணை செயலாளர் காளியப்பன், மாவட்ட சேவா பிரம்முக் செந்தில், நாகர்கோவில் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, செயலாளர் மகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஜெகன் உள்பட ஏராளமான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து வெளியே வந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அவர்களை போலீசார் இதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விசுவ இந்து பரிசத் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு வேனில் ஏற்றி மாதவபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு தங்கி இருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பை சேர்ந்தவர்கள் பாரத மாதா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

Tags:    

Similar News