குளச்சலில் கட்டுமரம் மோதி மீனவர் பலி
- கடல் சீற்றத்தில் எழுந்த ராட்சத அலையால் எதிரே கரையை நோக்கி வந்த ராஜ் என்பவரின் பைபர் கட்டுமரம் தூக்கி வீசப்பட்டது.
- கட்டுமரம் மோதி பலியான மீனவர் ராசையனுக்கு அருள் செல்வி என்ற மனைவியும் 5 பிள்ளைகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி :
குளச்சல் மரமடியை சேர்ந்தவர் ராசையன் (வயது 61).மீன்பிடி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் கட்டுமரத்தில் மீன் பிடிக்க சென்றார்.
கட்டுமரம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க புறப்பட்டு செல்லும்போது கடல் சீற்றத்தில் திடீரென எழுந்த ராட்சத அலையால் எதிரே கரையை நோக்கி வந்த மேல்மிடாலத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் பைபர் கட்டுமரம் தூக்கி வீசப்பட்டது. இந்த கட்டுமரம் ராசையன் சென்ற கட்டுமரம் மீது மோதியது. இதில் ராசையனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்ட ராசையன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது சகோதரர் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் சப் - இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலில் கட்டுமரம் மோதி பலியான மீனவர் ராசையனுக்கு அருள் செல்வி (54) என்ற மனைவியும் 5 பிள்ளைகளும் உள்ளனர்.