உள்ளூர் செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2024-11-13 06:54 GMT   |   Update On 2024-11-13 06:54 GMT
  • சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
  • பல்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு பானைகள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருள், பரிசு பொருட்கள், கார்த்திகை விளக்குகளை களி மண்ணால் செய்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இங்கு கார்த்திகை தீப திருநாளுக்காக விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாகரீக வளர்ச்சியினால் பீங்கான், மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும், மண் விளக்குகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்ணால் செய்யப்பட்ட சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.

வெளி மாவட்டம், மாநில விற்பனையாளர்கள் தேவையான விளக்குகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.


சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, தட்டு விளக்கு, மொரம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு உள்ளிட்ட வெவ்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

களி மண்ணால் செய்யப்பட்ட மனை விளக்கு, பெரிய மனை விளக்கு, உருளி விளக்கு, சாமி சிலை வைத்த உருளி விளக்கு, 5 விளக்குகள் கொண்ட தாமரை விளக்கு என புதிய டிசைன்களில் ரூ.200 முதல் ரூ.1000 வரை விற்பனைக்கு தயாராகி வருகின்றன.

இதுகுறித்து கலைடெரகோட்டா உரிமையாளர் கஜேந்திரன் கூறியதாவது:-

மண்ணால் செய்யப்படும் பொருட்களின் செய்கூலி, விற்கும் விலையை விட அதிகம். ஆனாலும், மக்கள் மத்தியில் மண்ணால் செய்யப்படும் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருச்சி, தஞ்சை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கும் விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

மண் பாண்ட கலையும், தொழிலும் அழியாமல் இருக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News