கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் மெகா தூய்மைப் பணி
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- இந்தப் பணி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவிப்பு.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டப சாலை உள்பட பல பகுதிகளில் அன்றாடம் தேங்கும் குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணி முகாம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நடந்தது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அலுவலர் முருகன், கவுன்சிலர் ஆனிரோஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தூய்மைப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் சூழ்நிலையில் பேரூராட்சி பகுதிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் நோக்கத்தில் இந்தப்பணி நாள்தோறும் நடைபெறும் என்று தெரிவித்தார்.