குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தாய்-மகன் படுகாயம்
- இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 32)குளச்சலில் ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் ரமேஷ் மேற்கு நெய்யூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தாய் ரெஜினாளை (55) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.செம்பொன்விளை கடந்து பெத்தேல்புரம் கிணறு குற்றிவிளை வளைவில் செல்லும்போது வர்த்தான்விளையில் ஒரு திருமண வீட்டிலிருந்து 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெஜினாள் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளச்சல் போலிசார் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.