நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள்
- வடக்கு மண்டல தலைவர் தகவல்
- மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினரும், வடக்கு மண்டல தலைவருமான ஜவஹர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் வார்டு பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி ஹனிபா நகரில் மேடுபள்ளமாக இருந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு கழிவுநீர் பாய்ந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜோதி தெருவில் மழைநீர் வடிகால்கள் சீர் செய்யப்பட்டது.
16-வது வார்டு சுத்தம், சுகாதாரம் நிறைந்த வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 2 போர்வெல்களில் இருந்து வரும் தண்ணீர் இணைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது. இம்மானுவேல் தெரு, ேஜாதி தெரு பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டும், நிலை உயர்த்தப்பட்டும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
அடுத்து 2 மாத காலத்திற்குள் புத்தன் அணை குடிநீர் திட்டம் அமலுக்கு வரும்போது தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும், வார்டு பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு, கிறிஸ்டோபர் தெரு ஓடைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையோரம் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
16-வது வார்டு பகுதியில் சுகாதார மையம் இல்லை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். அதனை போன்று 2 அங்கன்வாடிகள் உள்ளது. அவை மோசமான நிலையில் உள்ளது. அதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக கட்டிடம் அருகே அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளும் மேயரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 16-வது வார்டில் மட்டும் இதுவரை ரூ.2.50 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
எம்.எஸ்.ரோட்டில் கிறிஸ்துநகர் முன்பு ஓடைகள் முறையாக சீரமைக்கப்படாததால் இந்த பகுதியில் 20 வருடங்களாக தண்ணீர் தேங்கும். மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது. தற்ேபாது வடிகால் சீர் செய்யப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.