கொட்டாரத்தில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு
- பேரூராட்சி செயல் அலுவலர் மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
கன்னியாகுமரி:
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்து விட வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இருப்பினும் அதை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.
இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஏ. பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர்செல்வன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இந்த 3 தெரு நிர்வாகம் சார்பில் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாயை நிரந்தரமாக அடைப்பதற்கு பதிலாக பாதாள சாக்கடை திட்டம் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்யும்படி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் அங்குஇருந்து கலைந்து சென்றனர்.