உள்ளூர் செய்திகள் (District)

அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற இருசக்கர வாகனங்கள் அகற்றம்

Published On 2022-08-10 10:07 GMT   |   Update On 2022-08-10 10:07 GMT
  • ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது
  • இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையம் ஆகியவை ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள பழைய கழிவறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து மேயர் மகேஷ் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அண்ணா பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடை யூறாக ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. உடனடியாக அந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் அருண் மற்றும் போலீசார் அங்கு வந்து இடையூறாக நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்கு உள்ளே இருந்த கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சில கடைகளில் உணவு பண்டங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. எனவே அவற்றை சரியாக மூடி வைக்க வேண்டும் என்று மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

பஸ் நிலையத்தில் சில இருக்கைகள் பழுதாகி மோசமான நிலை யில் இருந்தது. அந்த இருக்கைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சேதமடைந்து இருந்த இருக்கைகளை அப்புறப்படுத்தினார்கள்.

இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், "அண்ணா பஸ் நிலையத்தை சீரமைக்க ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பஸ் நிலையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும். மேலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம்.

ஏற்கனவே இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பலர் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர். இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இரு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். கடைகளில் உணவு பண்டங்களை மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும்" என்றார்.

ஆய்வின் போது கவுன்சிலர் ரோசிட்டா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News