சுமை தூக்கும் தொழிலுக்கு தனி நலவாரியம்
- மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாட்டில் அரசை வலியுறுத்தி தீர்மானம்
- கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட சி. ஐ. டி. யு. சுமை பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வெட்டூர்ணிமடத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று நடந்தது. தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார். மாநில குழு அந்தோணி தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாநில தலைவர் பெருமாள், மாநிலகுழு சித்ரா, சந்திரகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முருகன், துரைமணி, சந்திரபோஸ், குணசேகரன், பரமசிவம், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கேரள மாநிலத்தை போல் சுமை பணி தொழிலுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் கல், ஜல்லி, மணல், எம்.சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டாஸ் மார்க்கில் வேலை பார்க்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரிசி உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.