கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் இடம் ஆய்வு
- தொல்லியல் ஆலோசகர் பார்வையிட்டார்
- 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.
அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம் என்று தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தொல்லியல் துறை ஆலோசகர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் கட்டப்படும் இடத்தையும் தொல்லியல் ஆலோசகர் மணி பார்வையிட்டார்