உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா பேரணி

Published On 2023-07-18 09:59 GMT   |   Update On 2023-07-18 09:59 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள் பேரணியாக சென்றனர்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா பேரணி இன்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிர மணியன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், திட்ட அதிகாரி பாபு, முதன்மை கல்வி அதிகாரி முருகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது டதி பள்ளி சந்திப்பு வழியாக எஸ்.எல்.பி. பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கையில் தமிழ் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள் பேரணியாக சென்றனர். மாணவ-மாணவிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகளும் நடந்தே சென்றனர். பின்னர் செய்தி துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து எஸ்.எல்.பி. பள்ளியில் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

தமிழ்நாடு நாள் என்று இன்று பெயர் சூட்டப்பட்ட நாளாகும். சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு நாள் என்று இன்று தான் பெயர் சூட்டினார்கள். தமிழ்நாடு வாழ்க என்று அப்போது கோஷம் எழுப்பினார்கள். இதன் வரலாறுகளை மாணவ-மாணவிகள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் இருந்த போது மொழி சிறு பான்மையினர் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினார்கள். மார்சல் நேசமணி உள்பட தலைவர்கள் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்க போராட்டம் நடத்தினார்கள். 1956-ம் ஆண்டு சென்னை மாகாணத்துடன் குமரி மாவட்டம் இணைந்தது. அதன் பிறகு சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று அண்ணா கோரிக்கை வைத்தார். அதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. போராடி பெற்ற பெயர் தமிழ்நாடு ஆகும். எனவே மாணவ-மாணவிகள் இந்த சமுதாயத்தினர் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் பெற்ற உரிமைகளை, சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News