கப்பியறையில் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர்-கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை உள்ளிருப்பு போராட்டம்
- கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி நடத்தினர்
- நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி :
கப்பியறை பேரூ ராட்சிக்குட்பட்ட ஓலவிளை பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்குவாரி செயல்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறி வருகின்றனர். மேலும் குவாரியை தடைசெய்யவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மறியல் போராட்டம் உட்பட பல போராட்டங்களும் நடைபெற்றன. மேலும் கப்பியறை பேரூராட்சி மன்றத்திலும் குவாரியை தடை செய்ய கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செயல் அலுவலர் ராஜேந்திரன், கருங்கல் போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.