புதுக்கடை அருகே பரக்காணியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும்
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருந்தது.
இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பு அணை கட்டினால் கடல் நீர் புகுவது தடுக்கப்படுவதோடு, குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் மாறுவதும் தடுக்கப்படும் எனக்கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு புதுக்கடையை அடுத்த பரக்காணி பகுதியில் ரூ.15.37 கோடியில் தடுப்பு அணை கட்ட முடிவு செய்தது.
பரக்காணியில் தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் முறையான ஆய்வு மற்றும் அனுமதியின்றி தடுப்பணை கட்டப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பரக்காணி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்ட தடை விதித்துள்ளது.
கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை இப்பணிகளை நிறுத்த வேண்டும், ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனுதாரர் தரப்பு மனு அளித்திருந்தால் அதனை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணையால் ஏற்படும் பாதிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களிடம் அறிக்கை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.