நாகர்கோவிலில் இன்று காலை இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
- 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது
- வியர்வையில் குளித்தவர்கள் மழையில் நனைந்தனர்
நாகர்கோவில் :
தமிழகத்தில் கோடை வெயில் கடந்த இரண்டு வாரங்களாக சுட்டெரித்து வருகிறது. தாங்க முடியாத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இன்னும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் இதே போல் தான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 45 மணிக்கு திடீரென்று இடி, மின்னலு டன் மழை கொட்டத் தொடங்கியது. காலை 6.45 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சவேரியார் கோவில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் போக முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவிலில் பெய்த இந்த திடீர் மழை பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை கொட்டிய நிலையில் இன்றைய வெப்ப நிலையும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு கீழ்தான் இருக்கும் என்றும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வந்தடைந்தது. இந்த ரெயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் மழை கொட்டியதை பார்த்து உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது சென்னையில் ரெயில் ஏறியதும் ரெயிலுக்குள்ளே இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தாக்கியது. நாகர்கோவில் வந்து இறங்கியதும் மழையைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்ற படியே மழை தண்ணீரில் உற்சாக குளியல் போட்டபடி ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.
நாகர்கோவிலில் இன்று அதிகபட்சமாக 34.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கொட்டாரம், மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.87 அடியாக இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் போது மான அளவு தண்ணீர் உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயி களுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.