உள்ளூர் செய்திகள்

சென்னை- கன்னியாகுமரி வழித்தடத்தில் வந்தேபாரத் ரெயில் இயக்க வேண்டும் - பயணிகள் சங்கம் கோரிக்கை

Published On 2023-03-28 06:50 GMT   |   Update On 2023-03-28 07:27 GMT
  • 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு பகுதி களை இணைக்கும்
  • வந்தேபாரத் ரெயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும்.

நாகர்கோவில் :சென்னை- கன்னியாகுமரி வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் - பயணிகள் சங்கம் கோரிக்கை

சென்னையில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை மற்றும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் 3 முறை ரெயில் சேவை போன்றவற்றையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலை சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் சார்பில், பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று அறிவித்தீர்கள். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் வந்தேபாரத் ரெயில்களை இயக்கும் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் 2-வது வந்தேபாரத் ரெயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த ரெயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும்.

பொதுவாக தெற்கு ரெயில்வேக்கு இது போன்ற அதிவேக ரெயில்கள் இயக்கப்பட்டால் அது சென்னையை மையமாக வைத்து பெங்களூர் அல்லது கோயம்புத்தூருக்கோ இயக்கப்படும்.அதை நிரூபிக்கும் வகையில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்ட 2ரெயில்களையும் சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவைக்கு இயக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்படும் ரெயிலை வைத்து முழு தமிழ்நாடும் பயன்படும் விதத்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்தேபாரத் ரெயில் இயக்க வேண்டும். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு தெற்கு ரெயில்வே செவி சாய்க்கவில்லை.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 740 கி.மீ வழித்தடத்தில் சென்னை - திருநெல்வேலி இடையே முழுவதும் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள திருநெல்வேலி- மேலப்பா ளையம் 3.6 கி.மீ மற்றும் ஆரல்வாய்மொழி -கன்னியாகுமரி 28.6 கி.மீ பாதை என மொத்தம் 32.2 மட்டும் ஒரு வழி பாதையாக உள்ளது.

ஆகவே இந்த தடத்தில் வந்தேபாரத் ரெயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு ரெயில் கூட தென்மாவட்டங்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட வில்லை.

ஆகவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையீட்டு வந்தேபாரத் ரெயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும்.

இதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் ரெயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்கவும் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இடநெருக்கடி பிரச்சனை இருப்பின் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து இயங்கும் ஒரு சில ரெயில்களை மாற்றம் செய்துவிட்டு, காசி தமிழ் சங்கம் ரெயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கன்னியாகுமரியிலிருந்து தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News