கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடை பெற்றது.
விழாவையொட்டி தின மும் காலையில் யாக சாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் பின்னர் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இரவு யாகசாலை பூஜையும் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்குதலும் நடை பெற்றது.
10-ம்திருவிழாவான நேற்று காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு பல வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். மறுநாளான இன்று காலை விவேகானந்தபுரம் கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை சிவஸ்ரீ டாக்டர் சங்கர் பட்டர் தலைமையில் 6 அர்ச்சகர்கள் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச் செயலாளர் பானுதாஸ், நிர்வாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மூத்த ஆயுட்கால ஊழியர்கள் அங்கிராஷ், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.