நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
- 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).
இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.