கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு நீடிப்பு
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நிறுத்தம்
- கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப் பாகவும் காணப்படுகிறது. இன்று 4-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற் றும் அரபிக்கடல்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.