டிரைவர் மது குடித்ததால் மினி பஸ் பறிமுதல்
- குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
- போலீசார் திங்கள்நகர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இரணியல்:
குளச்சல் டி.எஸ்.பி. தங்க ராமன் உத்தரவுபடி போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் திங்கள்நகர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டரிவிளை வழியாக வெள்ளிச்சந்தை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்சினை நிறுத்த கூறினார். ஆனால் மினி பஸ் டிரைவர் வாகனத்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறி நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் இரணியல் பகுதியில் மினி பஸ்சை மடக்கி பிடித்தார். அப்போது மினி பஸ்சை கல்லுக்கூட்டத்தை சேர்ந்த ஜெபின் (வயது 29) என்பவர் குடிபோதையில் இயக்கியது பிரீத் அனலைசர் கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மினி பஸ்சை பறிமுதல் செய்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் திங்கள்நகர் பேருந்து நிலையத்திலிருந்து யார் முதலில் புறப்பட்டு செல்வது என்பதில் மினி பஸ் ஓட்டுநர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பயணிகள் முகம் சுழிக்கும் வண்ணம் அவதூறாக வசைபாடி வருவது அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் திங்கள் நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் குடித்து விட்டு பணிக்கு வந்து உள்ளனரா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் புறக்காவல் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக மினி பஸ் வெளியே செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.