திருவட்டார் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்தது ஏன்? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
- கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
- தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.
வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.
மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.