உள்ளூர் செய்திகள்

வன பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும்பணி தொடங்கியது

Published On 2023-05-17 06:57 GMT   |   Update On 2023-05-17 06:57 GMT
  • 30 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்
  • களியல், மாறாமலை, கோதையாறு, ரோஸ்மியாபுரம், அசம்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம்

நாகர்கோவில் :

தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று (17-ந்தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் வன அதிகாரி இளையராஜா தலைமையில் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. யானைகள் கணக்கெடுக்கும் பணியில் 30 குழுக்கள் தனியாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஒவ்வொரு குழுவிலும் மூன்று வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.களியல், மாறாமலை, கோதையாறு, ரோஸ்மியாபுரம்,அசம்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருந்தது தெரியவந்துள்ளது.

தாடகை மலை, மருதம்பாறை, சாமிகுச்சி பகுதிகள் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வன பகுதிகளிலும் கணக்கெடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். ரோஸ்மியாபுரம் அழகிய பாண்டியபுரம் பகுதியில் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணியை வன அதிகாரி இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.காலை தொடங்கிய கணக்கெடுப்பு பணி மாலை 5 மணி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று யானைகளை நேரில் பார்ப்பதை வைத்து கணக்கெடுக்கப்பட்டது. நாளையும், நாளைமறுநாளும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். தற்பொழுது கணக்கெடுப்பு நடக்கிறது.குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. களியல் மாறாமலை அசம்பு கோதையாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற இடங்களிலும் வன ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இன்று யானைகளை நேரில் பார்ப்பதை வைத்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.இதைத் தொடர்ந்து சாணங்கள் மூலமாகவும் நீர்நிலை பகுதிகளிலும் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். மூன்று நாட்கள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பிறகே குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் வனப் பகுதியில் உள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்றார்.

Tags:    

Similar News