மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவ மலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணி அளவில் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்று.
மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி, கடலூர் விழுப்புரம் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் மயிலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.