கண்டமனூர் சன்னாசியப்பன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
- மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.
- இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் ஒண்டி மலையடிவாரத்தில் சன்னாசியப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சன்னாசியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.இறைவன் கருட பகவான் வடிவில் வந்துள்ளதாக எண்ணி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் உலக மக்கள் நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தை கண்டமனூர், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.
தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலாயுதபுரம் கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.