உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2023-06-08 04:15 GMT   |   Update On 2023-06-08 04:15 GMT
  • கருணாநிதி நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
  • முகப்பில் பேனா வடிவிலான தூண் வைக்கப்படுகிறது.

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு நினைவகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.

கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்களும்-வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில் நவீன விளக்கப்படங்களுடன் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்படும் என்றார்.

இந்த நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது. முகப்பில் பேனா வடிவிலான தூணும் வைக்கப்படுகிறது.

இந்த கட்டுமான பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை இன்னும் 2 மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வடசென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறோம்.

ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது.

தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News