உள்ளூர் செய்திகள்

குரூப் 4 தேர்வுக்காக 110 மையங்கள்

Published On 2022-07-21 09:00 GMT   |   Update On 2022-07-21 09:00 GMT
  • குரூப் 4 தேர்வுக்காக 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 30,646 பேர் எழுத உள்ளனர்

கரூர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 4 தேர்வுகளை கரூர் மாவட்டத்தில் 110 மையங்களில் 30,646 பேர் எழுதுகின்றனர் என கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் -4 தேர்வுகள் வரும் 24-ந் தேதி கரூர் மாவட்டத்தில் 110 மையங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 30,646 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வர்கள் அமர்ந்து தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நாளில் தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் 6, பறக்கும்படை குழுக்கள் 15 மற்றும் வினாத்தாள், விடைத் தாள்களை வழங்க ஏதுவாக 26 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.

மேலும், தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர்கள் மின்னணு கடிகாரம் (எலெக்ட்ரானிக் வாட்ச்) போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News