வெறிநாய்கள் கடித்து குதறி 5 ஆடுகள் உயிரிழப்பு
- வெறிநாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்தன.
- மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாவிடுதி ஊராட்சி பொன்னாகவுண்டனூரை சேர்ந்தவர் குணசேகரன் பட்டி போட்டு செம்மறியாடுகள் வளர்த்து வருகிறார். இவரது செம்மறியாடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. அதேபோல் பெருமாள் பட்டியில் இருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. முள்ளிப்பாடி பகுதியில் கடந்த வாரம் வெறிநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சி மன்றத்தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தரகம்பட்டி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும் காயம் அடைந்தன.
இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், கடவூர் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடை வளர்ப்புக்கு இடையூறாக வெறிநாய்கள் உள்ளன. ஆடுகளை வெறிநாய்கள் கடிப்பதால் ஆடுகள் உயிரிழப்பு மற்றும் காயமடைகின்றன. வெறிநாய் தொல்லை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.