உள்ளூர் செய்திகள்

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் களையிழந்த ஆடிப்பெருக்கு

Published On 2022-08-04 08:39 GMT   |   Update On 2022-08-04 08:39 GMT
  • காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஆடிபெருக்கு களையிழந்து காணப்பட்டது.
  • தடையை மீறி மக்கள் வழிபாடு செய்து கொண்டாடினர்.

கரூர்:

காவிரி ஆற்றங்கரை யோரங்களில் வெள்ளப்பெருக்கு காரணத்தால் ஆடி 18 கொண்டாட்டம் களையிழந்தது.குளித்தலையில் தடையை மீறி மக்கள் வழிபாடு செய்து கொண்டாடினர்.

ஆடி 18 விழாவையொட்டி கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளுக்கு நேற்று விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் ஆடி 18 விழா கொண்டாடப்படாத நிலையில், நடப்பாண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும், காவிரியில் தண்ணீர் வரத்து இருந்ததால் ஆடி 18 கொண்டாட்டம் இருக்கும் என்ற நிலையில் திடீரென நேற்று முன்தினம் காவிரியில் 1.40 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றினுள் மற்றும் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் வாங்கல், நெரூர், மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் காவிரி ஆற்றுப் பகுதிகள் மக்கள் வருகையின்றி நேற்று வெறிச்சோடின.

குளித்தலை நகராட்சி சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் காவிரி ஆற்றுக்கு செல்லவேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை செய்த நிலையிலும், பலரும் தடையை மீறி கடம்பர் கோயில் பகுதி காவிரி ஆற்றங்கரையோரத்தில் படையலிட்டு ஆடி 18ஐ கொண்டாடினர்.

கரூர் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கரூர் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுமக்கள் படையலிட்டு வழிப்பாடு செய்தனர். பலர் வீடுகளில் வழிப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News