வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் யூ டியூப் நிர்வாகிகளான சூர்யா மற்றும் பிரதீப் ஆகியோர் ராஜாவை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து காரில் வேலாயுதம்பாளையம் வந்தனர். மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் எதிரில் உள்ள பேக்கரிக்கு வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் வக்கீல் ராஜா மற்றும் சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, 6 பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் இருவரும் அவர்களது காரில் ஏறி தப்பிச் சென்றவர்களை துரத்திக் கொண்டு சென்றனர். காரில் தப்பிச் சென்ற மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நாமக்கல் மாவட்ட பகுதிக்கு சென்று மறைந்து விட்டனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த ராஜாவை உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் ராஜா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆன பதிவுகளை கைப்பற்றி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.