லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கல்
- கரூரில் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது
- வலைதளத்தை வேண்டுமென்றே முடக்கி வைப்பதாக குற்றச்சாட்டு
கரூர்,
கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 7 திரையரங்குகளில், 5 திரையரங்கங்களில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19-ந் தேதி வெளியாக உள்ளது.கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கரூர் சினிமாஸ் என்ற இணையதளம் மூலம் ரசிகர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியானது. ஆனால், 10 நிமிடத்திற்குள் வலைத்தளம் முடக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும், அதைத்தொடர்ந்து 11 மணிக்கும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெப்சைட் இயங்கவில்லை. மேலும், 19-ந் தேதி வரை படத்திற்கான டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.ரசிகர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே இணையதளத்தை முடக்கி வைத்துவிட்டு, மறைமுகமாக திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் விற்பனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டபோது, ஒரே நேரத்தில் ஏராளமான நபர்கள் வலைதளத்தை பயன்படுத்துவதால் இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.