கரூர் மாவட்டத்தில் குவாரி, கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக மனு
- கரூர் மாவட்டத்தில் குவாரி, கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக மனு அளித்தனர்
- கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல் பட்டு வருகின்றன.
கரூர்,
கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கா.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல் பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் குவாரித்தொழில் செய்பவர்கள் முறையாக அரசு அனுமதி பெற்று உரிய வருவாயை முறையாக செலுத்தி வருகின்றனர். எங்களுடைய வரி வருவாய் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்த நிலையில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை அழைத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் நடவடிக்கைகள் காரணமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாவட்ட அதிகாரிகளை கொண்டு ஆய்வில் ஈடுபட்டு அபராதம் விதித்து தொழிலை முடக்கும் எண்ணத்தோடு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, குவாரி மற்றும் கிரசர் தொழிலை இன்று முதல் நிறுத்தி வைப்பதாக, கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் ஏக மனதாக முடிவு எடுத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.