காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தால் பாதிக்கப்படுவோர் மறுவாழ்வுக்கான திட்ட அறிக்கை தயார் -கலெக்டர் தகவல்
- காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தால் பாதிக்கப்படுவோர் மறுவாழ்வுக்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது என்று கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
கரூர்:
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மறுவாழ்வு, மறுகுடியமர்வுக்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மறுவாழ்வு, மறுகுடியமர்வுக்கான மாவட்ட குழுக் கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் அலகு-1-ல் சிந்தலவாடி, பிள்ளாபாளையம், கருப்பத்தூர், குளித்தலை வட்டம் அலகு-2ல் மருதூர் தெற்கு-, வைகைநல்லூர் தெற்கு, இரணியமங்கலம், சத்தியமங்கலம். இனுங்கூர், குளித்தலை வட்டம், அலகு-3ல் தளிஞ்சி, நங்கவரம் தெற்கு-1, நெய்தலூர் தெற்கு, ராச்சாண்டார் திருமலை ஆகிய 12 கிராமங்களில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நில எடுப்பிற்கு உட்படும் விஸ்தீரணம் 346.11.38 ஹெக்டேர்.
இதனால் இங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு, மீள்குடியமர்வு இழப்பீட்டுக்கான வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, அது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நிர்வாகி, மறுவாழ்வு, மீள்குடியமர்வு அலுவலரால் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் நிலமெடுப்பில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, மீள்குடியமர்வு, உரிமைக் கூறுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில், நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு, மீள்குடியமர்வு இழப்பீடுகளை மறு ஆய்வு செய்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இறுதி செய்வது குறித்து மறுவாழ்வு, மறுகுடியமர்வுக்கான மாவட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநில மறுவாழ்வு ஆணையருக்கு பரிந்துரை செய்ய ஏதுவாக மறுவாழ்வு, மீள்குடியமர்வு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது என்றார்.