உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா

Published On 2023-06-07 06:53 GMT   |   Update On 2023-06-07 06:53 GMT
  • தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
  • இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை ஓட்டம் என்ற மராத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.காகிதபுரம் காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வேலாயுதம் பாளையம் ரவுண்டானா சென்று திரும்பும் வகையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 432 பேர் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசாக 100 பேருக்கு தலா ரூ. 500 வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காகித ஆலை சார்பில் நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட சுற்றுசூழலுக்கு ஏற்ற டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம், காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டிகங்காதர், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற கையேட்டினை எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட அதனை உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார் பெற்று கொண்டார்.

தொடர்ந்து காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத் தோட்டம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன், காகித ஆலை வனத்தோட்டத்துறை மற்றும் மனித வளத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காகித ஆலை நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (வனம்) நன்றி கூறினார்.

Tags:    

Similar News