உள்ளூர் செய்திகள் (District)

முதுமலை வனத்தில் பழுதாகி நின்ற கேரள அரசு பஸ்

Published On 2023-04-25 09:16 GMT   |   Update On 2023-04-27 05:51 GMT
  • பஸ் பழுதாகி நின்றதால், பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
  • கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

 கூடலூர்,

கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கேரள மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கர்நாடகாவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வாகனங்கள் கூடலூர்-முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகாவுக்கு சென்று திரும்புகிறது. இந்தநிலையில் நேற்று திருச்சூரில் இருந்து 65 பயணிகளுடன் மைசூருவுக்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா செல்லும் சாலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் பஸ் திடீரென பழுதடைந்து நடுக்காட்டில் நின்றது.

இதனால் பழுதை சரிசெய்யும் பணியில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதனால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் பயணிகளை வேறு பஸ்களில் அனுப்புவதற்கான நடவடிக்கையில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். மேலும் நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வர வாய்ப்பு இருந்ததால், கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்கள், பயணிகள் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் பஸ் தாமதமானது. தற்போது முதுமலை வனப்பகுதிக்குள் பழுதாகி நின்று விட்டதால் குழந்தைகளுடன் பரிதவிக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர். இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரள பஸ்களில் பயணிகள் மைசூருவுக்கு மிக தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News