கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500 பயணிகள் தவிப்பு
- முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்டனர்.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி வரை தவித்தனர்.
வண்டலூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மேலும் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதால் அப்போதும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் பயணிகள் பஸ் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்டனர்.
அங்கிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் போதிய அளவு இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி வரை தவித்தனர்.
குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு இருந்தால் பயணிகள் இதுபோன்று காத்துக் கிடக்க வேண்டியதில்லை என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.
ஆனால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் இயக்கப்படும் 1136 பஸ்கள் தவிர கூடுதலாக வெள்ளிக்கிழமை 482 பஸ்களும், நேற்று கூடுதலாக 550 பஸ்களும் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.