உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலம்: பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் மறியல்

Published On 2024-09-18 06:37 GMT   |   Update On 2024-09-18 06:37 GMT
  • நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
  • 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது.

பின்னர் சொந்த ஊருக்கு பக்தர்கள் செல்வதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்தனர்.

விழுப்புரம், சென்னை செல்லும் ரெயிலில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். ரெயிலில் இடம் கிடைக்காததால் பக்தர்கள், பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேபோல தற்காலிக பஸ் நிலையத்திலும் பக்தர்கள் குவிந்தனர். போதிய பஸ் வசதி இல்லாததாலும், பஸ்சில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

மதுரை, திருச்சி பகுதிகளுக்கு அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போதிய பஸ் வசதி இல்லாததால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று விட்டு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தோம். இதனால் நாங்கள் களைப்பாக உள்ளோம்.

போதிய பஸ் இல்லாமல் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் இது போன்று பக்தர்களை காத்திருக்க வைக்காமல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News