அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
- கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
- புனிதநீர் அடங்கிய கடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே வேதராஜபுரம் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு அடைக்கலம் தந்ததால் இவருக்கு அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலில் விநாயகர், அகோர வீரபத்திரர், தூண்டிக்கார சாமி, பெரிய உடையார், சின்ன உடையார் உள்ளிட்ட பரிவார சாமி சன்னதிகள் திருப்பணி நிறைவடைந்துள்ளது.
இதை அடுத்து இந்த கோவிலின் குடமுழுக்கு நேற்று நடந்தது.
இதை ஒட்டி கடந்த 22 ஆம் தேதி கணபதி பூஜை உடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது.
இந்த பூஜைகளை திருவெண்காடு ஸ்வேதாரணேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
நேற்று காலை 6 ஆம் கால யாக பூஜை தொடங்கியது.
அப்போது கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன.
பின்னர் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேள, தாளம் முழுங்கிட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு கோபுர கலசங்களுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதை அடுத்து ஒரே நேரத்தில் அனைத்து சன்னதிகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
அப்போது கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என சரண கோஷமிட்டனர்.
பின்னர் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.இதை ஒட்டி திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.