கந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
- இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
- இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமேலம்பட்டி கிராமத்தில் கந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புறனமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து கோவில் கட்டுமான பணிகள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளை செய்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து விரதம் இருந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் காலை, மாலை என கடந்த 15 நாட்களாக பூஜை நடந்து வந்த நிலையில் வட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
இதில் சாமிக்கு சீர் கொண்டு வந்து அதனை மேளதாளம் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு இந்து, இஸ்லாமிய மக்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் சீர்வரிசைகளை கோவில் நிர்வாகத்திடம் வழங்க அதனை பூசாரியிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இரு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்து கோவிலுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்து அன்னதான வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.