சின்னசேலம் அருகே 150 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த உலகிய நல்லூர்கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது.இன்று காலை 4ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து, சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 150 வருடங்களுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றதால் உலகிய நல்லூர் சுற்றியுள்ள கிராமங்களான ஈசாந்தை, நாட்டார்மங்கலம், அமகளத்தூர், கருங்குழி ,நயினார் பாளையம், மாங்குளம், அனுமந்தல் குப்பம், செம்பாக்குறிச்சி, ராயர் பாளையம், பெத்தானூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை வாங்கிச் சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.