தஞ்சையில் நாட்டுப்புற பாடல் பாடியபடி உற்சாகமாக நாற்று நட்ட மாணவ- மாணவிகள்
- மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.
- நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம்.
தஞ்சாவூா்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி முதன்மையானதாக விளங்கி வருகிறது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக வயல்களில் நெல் நடவு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் வயல்களில் நடவு பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த நிலையில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பாரம்பரிய நெல் ரகங்களை அறிந்து கொள்ளவும், நடவு பணிகளில் ஆர்வம் ஏற்படவும் நடவு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, தஞ்சை அருகே உள்ள கருப்பட்டிப்பட்டி கிராமத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய முறையில் நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள் நாற்று நடுவது எப்படி? என்று கற்றுக்கொடுத்தனர்.
இதையடுத்து 'அம்மா முத்துமாரி, அழகு முத்து மாரி, ஆனந்தமாய் கொண்டாடுவோம் அழகு முத்துமாரி' என நாட்டுப்புற பாடல்களை பாடியபடி மாணவ- மாணவிகள் உற்சாகமாக நாற்று நட்டனர். தொடர்ந்து, ராஜமுடி, சொர்ன சீரிகை உள்பட 56 நெல் ரகங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறும் போது:- நாட்டுப்புறப் பாடல் பாடியபடி நாற்று நட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம் .
இளைய தலைமுறை விவசாயத்தை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். நஞ்சில்லாத உணவை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும் என்றனர்.