மரக்காணம் அருகே செம்மண், கிராவல் கடத்திய லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்
- லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
- ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் செம்மண் மற்றும் கிராவல் மண் கிடைக்கும். இதனை ஒரு சிலர் லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் நடுக்குப்பத்திலிருந்து ஆலத்தூருக்கு செல்லும் வழியில் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த விவசாயி ஒருவர் இது குறித்து கிராம மக்களிடம் கூறினார்.
உடனடியாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைக் கண்ட செம்மண் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்மண் மற்றும் கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்?, இந்த வாகனங்களின் உரிமையாளர் யார்? என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.