உள்ளூர் செய்திகள் (District)

580 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-10-29 09:37 GMT   |   Update On 2022-10-29 09:37 GMT
  • மதுரை மாவட்டத்தில் 580 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  • டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கார் மற்றும் வாகனங்களில் திரளாக புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த வாகனங்கள் பெரும்பாலும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்கள் வழியாகவே செல்கின்றன.

இந்த நிலையில் தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசார் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், போக்குவரத்து சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும் ஒரு சில வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் டிரோன் காமிரா ஆகியவற்றின் காட்சிப்பதிவுகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை மாநகரில் மட்டும் விதிமுறைகளை மீறியதாக 494 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகள் வழியாகவும் தேவர் குருபூஜைக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. எனவே அந்தப் பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட 2 போலீஸ் சரகங்களிலும் 96 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிலைமான், கருப்பாயூரணி போலீசார் அந்த வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 580 வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News