ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி
- ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.77 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.
- ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அதற்கு பதிலாக போலி கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளார்.
மதுரை
மதுரை தனக்கன்குளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
சம்பவத்தன்று இவர் எஸ்.எஸ்.காலனி ஜவகர் தெருவுக்கு வந்தார். அங்குள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். எந்திரத்தில் பணம் வரவில்லை.
இந்த நிைலயில் அங்கு வந்த 35 வயது பெண், 'நான் முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களின் கார்டை கொடுங்கள்' என்று கேட்டதும் ராஜகோபால் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதன் பிறகு அந்தப் பெண், வங்கி ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்து கொண்டு முயற்சி செய்தார்.
ஆனால் பணம் வரவில்லை. இதையடுத்து அந்தப்பெண் ராஜகோபாலிடம் ஏ.டி.எம்.கார்டை திருப்பி கொடுத்தார். அதன் பிறகு ராஜகோபால் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு ஏ.டி.எம் மையத்தில் இருந்து ரூ.76 ஆயிரத்து 869 பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஏ.டி.எம். கார்டை சோதனை செய்து பார்த்தார். அப்போது தான் அது போலியானது என்பது தெரிய வந்தது.
ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அதற்கு பதிலாக போலி கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை அபகரித்து பண மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.