முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா
- முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், முதலைக்குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்டதும், பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டதுமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசியில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடமும் முதலைக் குளம் கம்ப காமாட்சி, பதினெட்டாம்படி கருப்புசாமி கோவிலில் கிராம மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும், கண்மாயில் நேர்த்தி கடனாக பலவகையான மீன்குஞ்சுகள் வாங்கி விடுவது வழக்கம்.
அப்படி விடப்படும் மீன்களை வளர்ந்த ஒராண்டு பின்னர் ஊர் மக்கள் ஒன்று திரண்டு பிடிப்பார்கள். கோவில் பூசாரி பொன்ராம், 2 தேவர் வகையறா பங்காளிகள், கிராமமக்கள் முன்னிலையில் விவசாய பாசன கமிட்டி தலைவர் எம்பி.ராமன், மேற்பார்வையில் அதிகாலை 5 மணிக்கு கண்மாயின் கரையில் நின்று கிராம கமிட்டியினர் பட்டாசு வெடித்து வெள்ளை கொடி அசைக்க உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.