பூ மார்க்கெட்டில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
- மதுரை மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
- இதனால் தொற்றுநோய் பரவுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு செல்ல அஞ்சுகிறார்கள்.
மதுரை
மதுரை மாட்டுத்தா வணியில் கடந்த 2009-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல் மற்றும் மலர் வணிக வளாகம் உருவாக்கப்பட்டது.
இந்த வணிக வளாகத்தில் 104 பூக்கடைகள், 127 நெல் கடைகள், 60 உரகடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு சொந்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 9.85 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை நிர்வகிக்க தனியாக கமிட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பூ மார்க்கெட்டை பொருத்தவரை தினமும் 100 டன்களுக்கு மேல் பூக்கள் வியாபாரம் நடைபெறும். தற்போதும் வழக்கமாக வியாபாரம் களை கட்டி உள்ளது. இதன் காரணமாக தினமும் வியாபாரிகள் குப்பைகளை மார்க்கெட்டின் பின்பகு தியில் எடுத்து சென்று கொட்டுகிறார்கள்.
இந்த குப்பைகள் சில வாரங்களாக அகற்றப்படாததால் அந்த பகுதியில் குப்பைகள் லைபோல தேங்கி கிடக்கிறது. இதனால் பூக்கள் மற்றும் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.
துர்நாற்றத்துடன் குப்பை குவியல் காட்சி அளிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அங்குள்ள சில வியாபாரிகள் கூறியதாவது:-
கடைகளின் சார்பில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகிறோம். மேலும் மதுரை மாநகராட்சிக்கு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் சொத்து வரியை செலுத்துகிறோம்.
ஆனால் மார்க்கெட் கமிட்டியோ, மாநகராட்சியோ வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்படாததால் குப்பைகள் மலை போல குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது மதுரையில் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோய் பரவிவரும் நிலையில் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகள் காரணமாக இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவி விடுமோ என்ற அச்சம் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
எனவே மார்க்கெட் கமிட்டி மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்றுவதுடன் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.