இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- கோவிலுக்கு நன்கொடை அளித்தவருக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும்.
ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பை, நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.