மதுரை பறக்கும் பாலத்தில் மகிழ்ச்சியுடன் பயணித்த வாகன ஓட்டிகள்
- மதுரை பறக்கும் பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.
மதுரை
மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ நீளத்திற்கு ரூ.751 கோடி மதிப்பில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை (பறக்கும் பாலம்) அமைக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான இந்த உயர்மட்ட சாலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மதுரை பறக்கும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பொங்க பாலத்தில் சென்றனர். பலர் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்ததும், பாலத்தில் செல்ல வந்த வாகன ஓட்டிகளை பா.ஜ.க.வினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்பு பா.ஜ.க.வினரும் வாகங்களில் பறக்கும் பாலத்தில் சென்றனர். அவர்கள் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை வாகனங்களில் அணிவகுத்து சென்றார்கள். உற்சாகம் பொங்க காணப்பட்ட அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த பாலத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் கூறுகையில், ''இந்த சாலையில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தருகிறது. இந்த பாலத்தால் வாகன ஓட்டிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மதுரை மாநகரில் போக்குவரது நெருக்கடி குறையும்'' என்றனர்.
பிரதமர் மோடி மதுரை பறக்கும் பாலம் மட்டுமின்றி மேலும் பல திட்டங்களையும் நேற்று தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து வடுகப்பட்டி பிரிவு வரையிலான ரூ.1,077 கோடி மதிப்பிலான 36 கி.மீ தூர நான்கு வழிச்சாலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் வாடிப்பட்டி முரளி ராமசாமி, பா.ஜ.க. ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்தி குமாரி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஊடக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் என்கிற செல்வமாணிக்கம், புறநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை பறக்கும் பாலம் திறக்கப்பட்டதையடுத்து இன்று அங்கு வழக்கமான போக்குவரத்து தொடங்கியது. அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.