டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக தாசில்தாருடன் பேச்சுவார்த்தை
- டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உடன்பாடு ஏற்படாததால் பெண்கள் போராட்ட அறிவித்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் சமீபத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். ஆய்வுக்கு வந்த டாஸ்மாக் மேலாளரிடம் கடையை மூடக்கூடாது என மது பிரியர்கள் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மது கடைைய அகற்றுவது தொடர்பாக நேற்று உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பேச்சு வார்த்தையின் போது தாசில்தார் கருப்பையா கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமை தான் உள்ளது. உசிலம்பட்டி- தேனி ரோட்டில் நாடார் பள்ளி முன்பு டாஸ்மாக் கடை உள்ளது. எங்கள் பிள்ளைகளும் அங்கு தான் படிக்கிறார்கள். நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், மது கடைைய அகற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம். அப்புறப்படுத்த மறுத்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம். எங்கள் ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஆகியவற்றை திருப்பி கொடுப்போம் என்றும், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.