உள்ளூர் செய்திகள் (District)

கிராம ஜல்லிக்கட்டு கமிட்டினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-05 09:44 GMT   |   Update On 2023-01-05 09:44 GMT
  • கிராம ஜல்லிக்கட்டு கமிட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராமம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அவனியாபுரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

அவனியாபுரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கு முன்பு அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாக்குடி கிராம ஜல்லிக்கட்டு, அய்வேத்தனந்தல் ஜல்லிக்கட்டு, உடைக்காலம் கண்மாய் ஜல்லிக்கட்டு, தாவரஏந்தல் கிராம ஜல்லிக்கட்டு,தெங்கால் கண்மாய் கிராம ஜல்லிக்கட்டு என 5-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன.

பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவனியாபுரத்தில் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் திருப்ப ரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை நடத்தி யவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதாக குற்றம் சாட்டி அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி தொடங்கப்பட்டு இதில் அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில் நீதிமன்றம் வரை அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியும், தெங்கால் விவசாய கமிட்டியும் சென்றது. நீதிமன்றம், 2 ஜல்லிக்கட்டு கமிட்டிகளும் இணைந்து செயல்படுங்கள் என அறிவுறுத்தியது.

இதை ஏற்க மறுத்த 2 ஜல்லிக்கட்டு கமிட்டிகளும் மேல்முறையீடு வரை சென்றது. பின்னர் மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேசியும் சமாதானமாகாத நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது.

பின்னர் வருடந்தோறும் தை மாதம் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என்று 2 கமிட்டினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடப்பட்டு அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான் நடத்துவோம் என 2 ஜல்லிக்கட்டு கமிட்டினரும், அமைச்சர் மூர்த்தியிடம் முறையிட்டனர். இதற்கு அவர் 2 கமிட்டினரும் ஒன்றாக இணைந்து வந்தால் நான் ஆதரவு தருகிறேன் என்றும், இல்லையென்றால் எனது ஆதரவு இல்லை என்றும் தெரிவித்து விட்டார். இதனால் இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் நிலை உள்ளது.

இந்த நிலையில் இன்று (5-ந் தேதி) அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். இதில் கமிட்டி தலைவர் முருகன் தலைமையில் நாட்டாமை கண்ணன், வழக்கறிஞர் அன்பரசன், தீத்தி பிச்சை, சிவமணி,முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இன்குலப், ம.தி.மு.க. கவுன்சிலர் அய்யனார், ஜெயசந்திரன், காங்கிரஸ் கஜேந்திரன், குமரையா, கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தனபாலன், அ.தி.மு.க. சார்பில் கார்த்திகேயன், பா.ஜ.க. சார்பில் சடாசரம், பாலன், மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவகுமார் உள்பட 300 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராமம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Tags:    

Similar News