- கருப்புசாமி என்பவர் தேவராஜின் மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
- தேவராஜ் தனது மளிகை கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 3,200 திருட்டு போயிருந்தது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ். அருகே உள்ள சாணார்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் தேவராஜ் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு தேவராஜ் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அன்று நள்ளிரவு தேவராஜின் மளிகை கடையில் இருந்த பூட்டை யாரோ உடைத்துள்ளனர். அதைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் கருப்புசாமி என்பவர் தேவராஜின் மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கருப்புசாமி உடனடியாக தேவராஜுக்கு தகவல் கொடுதார்.
அதன்பேரில், தேவராஜ் தனது மளிகை கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 3,200 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
அப்போது அங்கு பொருள்கள் வைத்திருக்கும் பகுதியில் படுத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஈரோட்டை சேர்ந்த தரணிதரன் என்பதும், அவருடன் மேலும் 2 பேர் வந்து மளிகை கடையின் பூட்டை உடைத்ததும் தெரியவந்தது.
தரணிதரனுடன் வந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து, தேவராஜ் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தரணிதரனை கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய இருவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.