செல்லப்பிராணிகள் வளர்ப்போர் உரிமம் பெறுவது கட்டாயம்: சென்னை மாநகராட்சி
- ரூ.50 செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.
- இந்த உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும்.
சென்னை :
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் செல்லப்பிராணிகளுக்கு இணைய வழி உரிமம் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அந்த வகையில், செல்லப்பிராணிகளை வளர்ப்போர், சென்னை மாநகராட்சியின் இணையத்தில் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்கின்றனர்.
பின்னர், விவரங்கள் மண்டல கால்நடை உதவி டாக்டர்களால் சரிபார்க்கப்பட்டு செல்லப்பிராணிக்கான உரிமம் உறுதிபடுத்தப்படுகிறது. இதற்கான கட்டணமாக ரூ.50 செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இத்திட்டத்தின் மூலம் 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர், 121 பேருக்கு செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதற்கான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.